தாய்லாந்தில் இருந்து ரூ 3.5 கோடி கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது
தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 3.5 கிலோ கஞ்சாவை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து, அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை கண்காணித்தனர். சில தினங்களுக்கு முன்பு, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, 'ஏர் ஏசியா' விமானம் வந்தது.அதில் வந்த பயணியர், குடியுரிமை சோதனைகளை முடித்து, சுங்க சோதனைக்கு சென்றனர். அப்போது, சென்னை யைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாவுக்கு சென்று மறுநாளே திரும்பியதைக் கண்டனர். அவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அவரது உடைமைகளை பிரித்து பார்த்தபோது, உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஏழு பார்சலில் இருந்த, 3.5 கிலோ மதிப்பிலான கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய்.அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீகரம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றதும், கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா பார்சலை பெற வந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.கடந்த சில தினங்களில், சென்னை விமான நிலையத்தில், இருவரிடம் மட்டும் 9.5 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.