உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குப்பையும் செல்வமாகும்: காமகோடி நம்பிக்கை

குப்பையும் செல்வமாகும்: காமகோடி நம்பிக்கை

சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் வி.காமகோடி கூறியதாவது: தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில், தினமும் பல்லாயிரம் டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை கொட்டுவதற்கு இடத்தேவை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து குப்பை கொட்டுவதால், நிலத்தடி நீர், காற்று மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அதற்கு, குப்பையை ரகம் வாரியாக பிரிக்க வேண்டும். முக்கியமாக மட்காத தன்மையுள்ள, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பிரித்து, அவற்றை பயன்பாடு பொருட்களாக, மறு சுழற்சி செய்ய வேண்டும். மட்கும் தன்மையுள்ள பொருட்களை, மண்ணுக்கு தீங்கு செய்யாததாகவும், வளம் சேர்க்கும் உரமாகவும் மாற்ற வேண்டும். அப்போது தான், குப்பையின் அளவை குறைக்க முடியும். இது பல்வேறு படிநிலைகளில் நடக்கும். முக்கியமாக, மட்காத தன்மையுள்ள, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம். அவ்வாறு செய்ய முடியாத பொருட்களை எரித்து, அவற்றில் கிடைக்கும் கரியை, செங்கல் வடிவில் மாற்றி, கட்டுமானத்துக்கு பயன்படுத்தலாம். சாம்பலில் செங்கல் தயாரிக்கலாம். அவ்வாறு எரிக்கும் போது கிடைக்கும் வெப்பத்தை, மின்சாரமாக மாற்றலாம். இப்படி, பல்வேறு மாற்று திட்டங்களை சோதித்து, ஆய்வக ரீதியாக வெற்றி பெற்றதுடன், சிறிய அளவில் கள ரீதியாகவும் சோதித்துள்ளோம். அந்த திட்டங்களை, தற்போது களத்தில் செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். துவக்கத்தில், ஒன்றிய அளவில் செயல்படுத்தவும், அப்பகுதி மக்களுக்கு, வேலை வாய்ப்பு, வருவாய் பெருக்கும் வழியிலும், இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக, நகர, மாநகர அளவில் செயல் படுத்த உள்ளோம். விரைவில், 'குப்பையும் செல்வம்' என்பதை புரிய வைப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி