தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு: அமைச்சர் உறுதி
சென்னை:''ஆவணங்களை முறைப்படுத்தி தந்தால், கோவில்பட்டி, சாத்துார், சிவகாசி தீப்பெட்டிக்கு, புவிசார் குறியீடு கிடைக்க, தகுந்த ஏற்பாடு செய்யப்படும்,'' என குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:காங்., - அசோகன்: சிவகாசி தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டை கொண்டாடுகிறது. சிவகாசி, சாத்துார், கோவில்பட்டி பகுதியில், தீப்பெட்டி தொழிலை நம்பி, ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன. இத்தொழிலில், 80 சதவீதம் பேர் பெண்கள். எனவே, சிவகாசி தீப் பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வேண்டும்.அமைச்சர் அன்பரசன்: புவிசார் குறியீடு என்பது, ஒரு பொருளுக்கு வழங்கப்படும், அறிவுசார் சொத்துரிமை ஆகும். வேளாண் விளைபொருள், உணவுப் பொருள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 64 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலா, முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை காரஅரிசி, பெரம்பலுார், செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு, புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது.செட்டிநாடு கைமுறுக்கு, சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டரை கருவாடு, பனங்கற்கண்டு ஆகியவற்றுக்கு, குறு, சிறு தொழில்கள் துறை வாயிலாக, புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அந்த பொருள் அப்பகுதியில் தோன்றி இருக்க வேண்டும்; அதற்கான வரலாற்று சான்றிதழ் இருக்க வேண்டும். சிவகாசி, சாத்துார், கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி தோன்றியதற்கான வரலாறு இல்லாததால், புவிசார் குறியீடு பெற முடியவில்லை. உரிய ஆவணங்கள் கிடைத்தால், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: ஆவணங்கள் என்னிடம் உள்ளன.சபாநாயகர் அப்பாவு: ஜப்பான் சென்று, அந்த தொழிலை கற்று வந்து ஆரம்பித்தோம் என, எம்.எல்.ஏ., அசோகன் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.அமைச்சர் அன்பரசன்: ஆவணங்களை முறைப்படுத்தி தந்தால், சிவகாசி தீப்பெட்டிக்கு, புவிசார் குறியீடு கிடைக்க, தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.