| ADDED : ஆக 08, 2024 09:09 AM
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை, 7:10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நீராவியால் இயங்கும் மலைரயில் உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவோல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இன்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த விமான படை முதன்மை தளபதி லெப்டினன்ட் கர்னல் இங்கோ கெர்கார்ட்ஸ் தலைமையில், 15 பேர் ராணுவ அதிகாரிகள் ஊட்டி மலை ரயிலில் ஆர்வமுடன் பயணம் செய்தனர். முன்னதாக இன்று காலை, 6:00 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்த ராணுவ அதிகாரிகளை, பெங்களூரில் உள்ள ஏர்மார்சல் நாகேஷ் கப்பூர்மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மலைரயில் தொடர்பான கண்காட்சியை ராணுவ அதிகாரிகள் கண்டு ரசித்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே அதிகாரிகளிடம் மலைரயிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.பின்னர் ரயில்வே துறையால் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் அமர்ந்து, பிற சுற்றுலா பயணிகளோடு சென்ற மலைரயிலில் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் குன்னூரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள இந்திய ராணுவ முகாமிற்கு செல்ல உள்ளனர்.