தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருவதால், அப்பதவிக்கு புதிதாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, ஜார்க்கண்டைச் சேர்ந்த அஜோய் குமார் நியமிக்கப்பட்டார். ராஜினாமா ஜார்க்கண்டில் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மேலிட பொறுப்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தலுக்கு பின், கோவாவைச் சேர்ந்தவரான அகில இந்திய காங்கிரஸ் செயலர் கிரிஷ் சோடங்கர், அவருக்கு துணையாக கர்நாடகாவைச் சேர்ந்த சூரஜ் ஹெக்டே இருவரும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். கிரிஷ் சோடங்கர் மாதந்தோறும் தமிழகத்திற்கு வந்து, கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். கட்சியில் கிராம கமிட்டி நிர்வாகிகள் நியமனத்திற்கு ஊக்கமளித்து வந்தார். தமிழக காங்.,குக்கு வரும் சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., கூட்டணியில் அதிக சீட்களை வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதே கருத்தை தன்னிடம் வலியுறுத்திய தமிழக காங்., நிர்வாகிகளின் கருத்துகளை மேலிடத்துக்கு எடுத்துச் சென்று, அதையே தன் கருத்தாகவும் வலியுறுத்தி வந்தார். குற்றச்சாட்டு இந்நிலையில், சமீபத்தில் கிரிஷ் சோடங்கருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டது. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, 'தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தொடர விரும்பவில்லை' என, காங்கிரஸ் மேலிடத்தில் அவர் கூறி விட்டதாகக் கூறப் படுகிறது. அதனால், அவர் வகித்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே மேலிட பொறுப்பாளராக இருந்த ஸ்ரீவல்ல பிரசாத், அப்பதவியை மீண்டும் பெற காய் நகர்த்தி வருகிறார். தமிழக காங்கிரசில் பல ஆண்டுகளாக மேலிட பொறுப்பாளராக இருந்த ஸ்ரீவல்ல பிரசாத், குறிப்பிட்ட சில தலைவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளக் கூடியவர் என்ற குற்றச்சாட்டு இருப்பதால், அவரை அந்தப் பொறுப்பில் நியமிக்கக் கூடாது என, தமிழக காங்கிரசார் பலரும் எதிர்ப்பு குரல் எழுப்புகின்றனர். - நமது நிருபர் -