வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கிரஸ் கட்சிக்கு சொத்து சேர்த்து கொடுத்த சமுதாயத்தின் ஆட்கள் யாரையேனும் உறுப்பினராக போடலாம் ஆனால் இவங்க திராவிட மாடல் சொல்படி ஆடுபவங்க அதனால் உடனே மறுத்திடுவாங்க
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, நான்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க, கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை கூடுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில், 200 கிரவுண்ட் நிலம், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இந்த நிலத்தின், இன்றைய சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய். இதுபோக, ஏராளமான சொத்துக்கள் காங்கிரசுக்கு உள்ளன. மீட்பதில் மும்முரம் இந்த சொத்துக்களை தவிர்த்து, கடலுார், வேலுார் என, தமிழகம் முழுதும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், காங்கிரஸ் கட்சி அறக்கட்டளையின் கீழ் உள்ளன. சில மாவட்டங்களில் தனியாரிடமும், கட்சி நிர்வாகிகளிடமும், த.மா.கா., நிர்வாகிகளிடமும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் உள்ளன. சில சொத்துக்கள் சம்பந்தமாக, நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை காங்., சொத்துக்களை மீட்பதில் மும்முரமாக இருக்கிறார். அவர் அமைத்திருக்கும் சொத்து மீட்பு குழுவின் தலைவர் தங்கபாலு, குழுவினருடன் மாவட்ட வாரியாக சென்று, சொத்துக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சொத்துக்களை முறையாக மீட்டு நிர்வகிக்கும் வகையில், காங்., அறக்கட்டளைக்கு காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை நிரப்ப வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், நாளை சத்தியமூர்த்தி பவனில் நடக்க உள்ளது. பரிசீலனை பட்டியல் கூட்டத்தில், அறக்கட்டளை உறுப்பினர்களாக, நான்கு பேரை நியமிக்க ஆலோசனை நடக்கிறது. தற்போது அறக்கட்டளைக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மட்டும் உறுப்பினராக உள்ளார். இன்னும் நான்கு உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும். பெண் உறுப்பினர் என்ற அடிப்படையில் ஜோதிமணி எம்.பி.,யும், தலித் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் எம்.பி.,யும், அகில இந்திய காங்கிரஸ் செயலருமான விஸ்வநாதன்; தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும், துணைத்தலைவருமான சொர்ணா சேதுராமன்; சிறுபான்மையினர் சமுதாயம் என்ற அடிப்படையில் முன்னாள் எம்.பி., ஜே.எம்.ஹாரூண் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் தவிர, மாநிலத் தலைவரும் உறுப்பினராக செயல்படுவர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர் மற்றும் மேலிட பொறுப்பாளர் உறுப்பினர்களாக இருப்பர். மொத்தம் எட்டு உறுப்பினர்கள், அறக்கட்டளை நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரத்தை பெறுகின்றனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு சொத்து சேர்த்து கொடுத்த சமுதாயத்தின் ஆட்கள் யாரையேனும் உறுப்பினராக போடலாம் ஆனால் இவங்க திராவிட மாடல் சொல்படி ஆடுபவங்க அதனால் உடனே மறுத்திடுவாங்க