உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் முறையாக தங்கம் விலை சவரன் ரூ.75,000ஐ தாண்டியது

முதல் முறையாக தங்கம் விலை சவரன் ரூ.75,000ஐ தாண்டியது

சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஆபரண தங்கம் சவரன் விலை 75,000 ரூபாயை தாண்டியுள்ளது. இது, நகை பிரியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உச்ச விலை தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம், சவரன் 74,560 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்தாலும், புதிய உச்சத்தை எட்டவில்லை. நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம் 9,285 ரூபாய்க்கும், சவரன் 74,280 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 128 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து, 9,380 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 75,000 ரூபாயை தாண்டி, 75,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 129 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரித்துள்ளது. முதலீடு இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: பல்வேறு நாடுகள் மீது, அமெரிக்கா முரண்பாடான வரிகளை விதிப்பதும், பின், அதை மேலும் அதிகரிப்பதும், மிரட்டும் வகையில் மேற்கொள்ளும் செயல்களும், சர்வதேச பொருளாதாரத்திற்கு பெரிய சவாலாகவும், அதை சீரழிக்கும் விதமாகவும் உள்ளன. இதனால், பெரும்பாலான நாடுகள் தங்கள் கையிருப்பிலுள்ள டாலர் உள்ளிட்ட இதர கரன்சிகளை, தங்கமாக மாற்றத் துவங்கி உள்ளன. சர்வதேச முதலீட்டாளர்கள், கடந்த இரு ஆண்டுகளாக தங்கத்தில் பெருமளவில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதித்துள்ளனர். இது, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் மீது முதலீடு குவிந்து வருவதால், தங்கம் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை