வெளிமாநில பள்ளிகளுக்கு தமிழ் புத்தகம் இலவசமாக தர அரசு சம்மதம்
சென்னை:வெளி மாநிலங்களில் தமிழ் சங்கங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, இலவசமாக தமிழ் பாடப் புத்தகங்களை வழங்க அரசு சம்மதித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில், தமிழ் சங்கத்தினரால் நடத்தப்படும் தமிழ் பள்ளிகளுக்கு, தமிழக அரசு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது. அதிக செலவு ஏற்படுவதாகக் கூறி, தமிழக அரசு பாடநுால் கழகம், இந்த ஆண்டு புத்தகங்கள் வழங்குவதை நிறுத்தியது. இதனால், அங்குள்ள தமிழர்களின் குழந்தைகள், தமிழ் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன், தமிழ்வழி பள்ளிகள் மூடப்படும் அபாயமும் உருவானது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து, கடந்த 12ம் தேதி, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக பாடநுால் கழகம், வெளி மாநிலங்களில் தமிழ் சங்கத்தினரால் நடத்தப் படும் பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், பழைய நடைமுறைப்படி தமிழ் புத்தகங்களை இலவசமாக வழங்க முன் வந்து உள்ளது. இது குறித்த தகவலை, அயலக தமிழ் அமைப்புகள் மற்றும் இந்திய மாநில தமிழ் சங்கங் களுக்கு அனுப்பி உள்ளது. அதில், பள்ளிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை தெரிவித்து, சென்னை வட்டார அலுவ லகம் மற்றும் அடையாறு கிடங்கில், உரிய எண்ணிக்கையில் தமிழ் பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியதற்கான ஒப்புதலை பெற்று, பாடநுால் கழகத்துக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அடுத்த கல்வியாண்டுக் கான தேவை குறித்து, வரும் டிசம்பர் மாதமே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.