உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 நகர்ப்புற குழுமங்களுக்கு ரூ.58 கோடி ஒதுக்கியது அரசு

5 நகர்ப்புற குழுமங்களுக்கு ரூ.58 கோடி ஒதுக்கியது அரசு

சென்னை : புதிதாக உருவாக்கப்பட்ட, ஐந்து நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு புதிய பணியிடங்கள் ஏற்படுத்த, 57.65 கோடி ரூபாயை வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர், சேலம், திருச்சி நகரங்களில், புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்புகள், 2021, 2022ம் ஆண்டுகளில் வெளியிடப் பட்டன. இதில், 1,500 சதுர கி.மீ.,க்கு மேல் பரப்பளவுள்ள கோவை, மதுரை குழுமங்கள் முதல் வகையாகவும், 1,500 சதுர கி.மீ., வரை பரப்பளவுள்ள சேலம், திருச்சி, திருப்பூர் இரண்டாம் வகை குழுமங்களாகவும், 1,200 சதுர கி.மீ., பரப்பளவுள்ள ஓசூர் மூன்றாம் வகை குழுமமாகவும் வகைபடுத்தப்பட்டுள்ளன. இந்த குழுமங்களுக்கான நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவற்றில் இருந்து பணியிடங்களை பகிர்வது என திட்டமிடப்பட்டது. இதன்படி, கோவை, மதுரைக்கு, 164; திருப்பூர், திருச்சி, சேலத்துக்கு, 195; ஓசூருக்கு, 45 என பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், டி.டி.சி.பி.,யில் இருந்து, 38 பணியிடங்கள் மாற்றப்பட உள்ளன, 24 பணியிடங்கள், அயல் பணி அடிப்படையில் மாற்றப்பட உள்ளன. அத்துடன், சி.எம்.டி.ஏ.,வில், இருந்து, 20 பணியிடங்கள் அயல்பணி அடிப்படையில், புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு மாற்றப்பட உள்ளன. இந்த பணியிடங்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, கோவை தவிர்த்து, பிற ஐந்து நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு, 57.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையை ஐந்து ஆண்டுகளில் செலவிடும் வகையில் படிப்படியாக விடுவிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !