வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமையான பதிவுகள், கட்டுரைகள், கதைகள்
சென்னை:களப் பிரிவில், 38,000 காலியிடங்கள் உள்ள நிலையில், 1,850 ஆட்களை தேர்வு செய்ய, மின் வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட, 1.42 லட்சம் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 81,000 பேர் பணிபுரியும் நிலையில், 61,000 காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக, மின் கம்பம் நடுதல், மின் சாதன பழுதை சரி செய்தல் உள்ளிட்ட கள பிரிவுகளில், 38,000 காலியிடங்கள் உள்ளன. இதனால், பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்புமாறு, ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, கள பிரிவில், 10,200 பேரை தேர்வு செய்ய, 2022 ஆகஸ்டில் அரசிடம் வாரியம் அனுமதி கேட்டது. அரசும் வாரியமும் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், அனுமதி அளிக்காமல் தாமதம் செய்யப்பட்டது. காலியிடங்களை நிரப்ப கோரி, தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றன. இதையடுத்து, கள பிரிவில், 1,850 பேரை தேர்வு செய்ய, அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள், பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. தற்போது, அதிக மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு ஏற்ப ஊழியர்கள் இல்லாததால், பலர் மன உளைச்சலுடன் பணிபுரிவதால், மின் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.களப் பிரிவில், 38,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 1,850 பேரை நியமிப்பதால் என்ன பயன்? அதிகாரிகள், களத்திற்கு வந்து ஊழியர்களின் சிரமத்தை பார்க்காமல், அறையில் இருந்து நிதிச்சூழலை வைத்து, முடிவு எடுப்பது சரியல்ல. 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, உதவி பொறியாளர் பதவியில், 200 பேரை தேர்வு செய்யும் பணி, அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 'இந்தாண்டில் மேலும், 400 உதவி பொறியாளர், 650 தொழில்நுட்ப உதவியாளர்கள், 1,850 கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்' என்றார்.
அருமையான பதிவுகள், கட்டுரைகள், கதைகள்