உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் தொழில்முனைவோர் திட்டம் ரூ.10 லட்சம் வரை வழங்க அரசு ஒப்புதல்

மகளிர் தொழில்முனைவோர் திட்டம் ரூ.10 லட்சம் வரை வழங்க அரசு ஒப்புதல்

சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக்க, தலா ஒருவருக்கு, 25 சதவீத மானியத்துடன், 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 18 முதல், 49 வயதுக்கு உட்பட்ட, 1.77 கோடி மகளிரில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர். கடனுதவி பொருளாதார வளர்ச்சியில் தமிழக மகளிரின் பங்கை மேலும் அதிகரிக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக்கும், பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியானது. இதற்காக, 225 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்த உள்ளது. இதற்காக திட்ட சலுகைகள், பயனாளிகள் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு, திட்டத்தை துவக்க அரசிடம் கடந்த ஏப்ரலில் அனுமதி கேட்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, நம் நாளிதழில் கடந்த மாதம், 21ம் தேதி ச ய்தி வெளியானது. இதையடுத்து, பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, அம்மாதம், 25ம் தேதி ஒப்புதல் அளித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரூ.2 லட்சம் மானியம் இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்க ஒருவருக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வரை, வங்கிகள் வாயிலாக கடனுதவி வழங்கப்படும். இதற்கு, 25 சதவீதம் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். தொழிலை பதிவு செய்வது, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட ஆதரவுகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின், 'பேம் டி.என்.,' நிறுவனம் வழங்கும். பயனாளியின் வயது குறைந்தது 18; அதிகபட்சம், 55 ஆக இருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிக்கு அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், கைவினை பொருட்கள், ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் தொழில்களை துவக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை