பந்தலூர்: 'இது நம்ம சொத்து தானே' என்று நினைத்துக்கொண்ட வாலிபர், அரசு பஸ்சை ஓட்டிக்கொண்டு போன சம்பவம், நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் நேற்றிரவு நடந்துள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று இரவு கரியசோலை என்ற இடத்திற்கு, அரசு பஸ் சென்றுள்ளது. இரவு 9 மணிக்கு வழக்கமாக நிறுத்தும் கரியசோலை பஸ் நிறுத்தத்தில், நிறுத்தி விட்டு, அருகே உள்ள அறையில் டிரைவரும், கண்டக்டரும் துாங்கச்சென்றனர். காலை 6 மணிக்கு டிரைவர் பிரசன்னகுமார், கண்டக்டர் நாகேந்திரன் இருவரும் வந்து பார்த்தபோது பஸ்ஸை காணவில்லை.அதிர்ச்சியில் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அந்த குளிரிலும் வியர்த்து விட்டது. அக்கம் பக்கத்தில் ஓடி ஓடித் தேடினர். வழியில் தென்பட்டவர்களிடம் எல்லாம் விசாரித்தனர்.அப்போது அந்த வழியில் வந்த சிலர், சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, தேவாலா செல்லும் சாலையில் டான்டீ சரக எண் 5க்குட்பட்ட பகுதியில், சாலையோர தடுப்பு சுவரில் இடித்தபடி, பஸ் நிற்பதாக கூறினர்.அவசரம் அவசரமாக அங்கு ஓடிச்சென்ற டிரைவரும், கண்டக்டரும், பஸ் நிற்பதை கண்ட பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பஸ்சில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.இதற்குள் தகவல் பரவியதால் ஊர் மக்கள், போலீசார் வந்து விட்டனர். போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கிளை மேலாளர் அருள்கண்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், உதயசூரியன் ஆகியோரும் வந்தனர். கண்டக்டருக்கும், டிரைவருக்கும் செமையாக டோஸ் விழுந்தது. சம்பவம் பற்றி நெலாக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.20 வயது வாலிபர் செய்த வேலை
விசாரணையில் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த முகம்மது என்பவரின் 20 வயது மகன் ரிஷால் என்பவர், இந்த வேலையை பார்த்தது தெரியவந்தது. தேவாலா ஹட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் பைக்கை நேற்று இரவு திருடிய ரிஷால், வழியில் பஸ் அனாதையாக நிற்பதை பார்த்துள்ளார்.இவ்வளவு பெரிய பஸ் இருக்கும்போது, பைக் யாருக்குத் தேவை என்று நினைத்தவர், அதே இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, பஸ்சை கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.சற்று துாரம் சென்ற பிறகு, பஸ் மக்கர் செய்திருக்கிறது. இதற்கு மேல் ஓட்டிச்சென்றால் விபத்தில் சிக்கி விடுவோம் என்று பயந்து தடுப்புச்சுவரில் மோதி நிறுத்தி விட்டார்.வடிவேலு பட காமெடி
இந்த விவரங்களை அறிந்த போலீசார், ரிஷாலை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வடிவேலு நடித்த சினிமா ஒன்றில், அரசு பஸ்சை, 'இது உங்கள் சொத்து' என்று கூறி, விலை பேசி விற்க முயற்சித்தது போல காட்சி இருக்கும்; அப்படி உண்மையிலேயே நினைத்துக்கொண்டு பஸ்சை ஓட்டிச்சென்று விட்டார் போலிருக்கிறது என கிராம மக்கள் நேற்று முழுவதும் பேசி சிரிப்பாய் சிரித்தனர்.