வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் தாமதம்: பயணியர் வருத்தம்
சென்னை:'வார இறுதி நாட்களில், சென்னை உட்பட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும், வெளியூர் பஸ்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன' என, பயணியர் வருத்தம் தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், வார இறுதி நாட்களில், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, பெங்களூரு உட்பட பல்வேறு வழித்தடங்களில், 2,500க்கும் அதிகமான விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் சேவை மேம்பாடு குறித்து, அடிக்கடி பயணியரிடம் கருத்து கேட்கப்படுகிறது. நடத்துநர் நடத்தை அதில், வெளியூருக்கு இயக்கப்படும் பஸ்கள் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம், ஓட்டுநர், நடத்துநர் நடத்தை, நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல்களின் உணவு தரம், கட்டண விபரம், சுகாதாரம், டிக்கெட் முன்பதிவில் இடையூறு உள்ளதா என்ற விபரங்கள், பயணியரிடம் கேட்கப்பட்டன. இதில், வார இறுதி நாட்களில், அரசு வெளியூர் பஸ்கள் தாமதமாக இயக்கப்படுவதாக, அதிகமான நபர்கள் வருத்தம் தெரிவித்து ள்ளனர். இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாயிலாக, தினமும் இயக்கப்படும் 2,500க்கும் அதிகமான விரைவு பஸ்களில் 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. விரைவு பஸ்களில், பயணம் செய்வோரிடம் புகார்கள் பெறுகிறோம். பயணியர் தெரிவிக்கும் புகார்களை அடிப்படையாக வைத்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இதன் அடிப்படையில், பயணியருக்கான சேவை வழங்கும் தரம் உயர்ந்துள்ளது. இருப்பினும், சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில், வெளியூருக்கு இயக்கப்படும் பஸ்கள், சரியான நேரத் துக்கு செல்வதில்லை. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை, தாமதமாக செல்வதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதற்கு, அரசு போக்கு வரத்து கழகங்கள் மட்டுமே பொறுப்பாக முடியாது. நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நடக்கும் பணிகளால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், அரசு போக்குவரத்து கழகங்களால், பஸ்கள் இயக்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.