அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அவகாசம் கேட்பு
சென்னை:'அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.சென்னையில் உள்ள தேசிய நலவாழ்வு அலுவலகத்தில் நடந்த, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் டாக்டர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, திருச்சி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களும், அரசு டாக்டர்களை குற்றவாளிகள் போல் நடத்தியதாக, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.'பிரசவத்தின் போது ஒரு உயிரிழப்பு நடந்தாலும், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், அதை கண்டித்து, அரசு டாக்டர்கள் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் சுப்ரியா சாஹு, அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களுடன், நேற்று பேச்சு நடத்தினார். 'ஆய்வு கூட்டங்களில், டாக்டர்கள் தரகுறைவாக நடத்தப்பட மாட்டார்கள். கோரிக்கைகளை நிறைவேற்ற, ஒரு மாதம் அவகாசம் வேண்டும்' என, சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:துறை செயலர் சுப்ரியா சாஹு, எங்களிடம் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆய்வு கூட்டங்களில், இனி டாக்டர்கள் தரக்குறைவாக நடத்தப்பட மாட்டார்கள். காலியிடங்களை நிரப்புதல், சம்பள உயர்வு குறித்து ஆராயப்படும் என்று கூறியுள்ளார்.'அரசு மருத்துவமனைகளில், போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் முடிய ஒரு மாதம் அவகாசம் தேவை. வரும் ஜனவரியில் மீண்டும் கூட்டம் நடத்தப்படும். அதற்குள் சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்' என, உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக, எங்கள் சங்க நிர்வாகிகளுடன் பேசிய பின், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.