| ADDED : ஆக 13, 2025 04:37 AM
மதுரை: 'நான்கரை ஆண்டுகளில் எதுவும் செய்யாததை குறித்து வைத்துள்ளோம். 2026 தேர்தலில், தி.மு.க.,வுக்கு இரட்டிப்பாக கொடுப்போம்' என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் மாநில தலை வர் ரமேஷ், பொதுச்செயலர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது: கடந்த 2021 தேர்தல் காலத்தில் துாய்மைப் பணியாளர் நலன் என வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., அரசு, அவர்களுக்கு மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடந்தும், தோல்வி என வரும் செய்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துாய்மைப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, எல்லோரையும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு, 'நாங்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை. இருந்தால் காட்டுங்கள்' என கூறியுள்ளார். இது துாய்மைப் பணியாளரை அவமதிப்பதாகவும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவும் உள்ளது. நியாயமான கோரிக் கையை வைத்து போராடும் துாய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்கள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறோம். தங்களுக்கு இந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க., அரசு என்னவெல்லாம் வழங்கியது என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், அவற்றை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கும் மனநிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.