வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளில் அரசு தீவிரம்
சென்னை: 'வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், துணை முதல்வர், அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில், 105 நிவாரண முகாம்களில், 20,625 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உணவு பொட்டலங்கள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2.90 லட்சம் உணவு பொட்டலங்கள், 4,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வு துறையால் 183 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 11,578 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2,035 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தில், 728 வீடுகள் பகுதியாகவும், 132 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரை சந்திக்க முடிவு
'புயல் பாதித்த மாவட்டங்களில், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு, 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். சேத பாதிப்பு முழு விபரங்கள் திரட்டப்பட்ட பிறகு, அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கையை, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் நேரில் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புதுடில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.