உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு - யூனியன் பேச்சு தோல்வி 9ம் தேதி முதல் பஸ்கள் ஓடாது

அரசு - யூனியன் பேச்சு தோல்வி 9ம் தேதி முதல் பஸ்கள் ஓடாது

சென்னை:அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சு தோல்வியில் முடிந்ததால், வரும் 9ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், தொழிலாளர் நலத் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில், முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில், அரசு போக்கு வரத்துக் கழகங்களை சேர்ந்த, 24 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

நேற்று மாலை 3:30 மணிக்கு துவங்கிய பேச்சு, மாலை 5:00 மணியில் முடிவடைந்தது.'ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, பொங்கலுக்குப் பின் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என, அமைச்சர் கூறியிருக்கிறார். ஊதிய ஒப்பந்த பேச்சுக்கான குழு அமைத்து, ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஓய்வூதியர் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது; அதை தீர்க்க அவகாசம் தேவை' என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தொழிற்சங்கங்கள், 'பல ஆண்டுகளாக, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கு தீர்வு காண மேலும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. 'இந்த பிரச்னையில் தெளிவாக முடிவெடுக்க முடியாத பட்சத்தில், வேலைநிறுத்தத்தை நோக்கிச் செல்வதை விட வேறு வழியில்லை. 'குறிப்பாக, போக்குவரத்து பணியாளர்களுக்கு 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு தேதி, ஓய்வுபெற்ற தொழிலாளர் அகவிலைப்படி உயர்வு தேதியை அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.

முடிவு

இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், முத்தரப்பு பேச்சு தோல்வியடைந்தது. தொழிற்சங்க நிர்வாகிகள், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வெளியேறினர்.கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது: பொங்கலுக்கு முன் ஓய்வூதியர் பிரச்னைக்காவது தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைக்கு கூட, நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே, வரும் 9-ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்குவது என முடிவு செய்துள்ளோம். அ.தி.மு.க., தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் சி.ஐ.டி.யு., உள்ளடங்கிய கூட்டமைப்பு இணைந்து, வேலை நிறுத்தத்தை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைவிட வேண்டும்!

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பின், தொழிற்சங்கங்களோடு பேச்சு நடத்தி, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டுகிறேன்.- சிவசங்கர்போக்குவரத்து துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஜன 04, 2024 20:02

2001ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவிகித (ரூ.6,000) போனஸை குறைத்து 8.33 சதவிகிதம் (ரூ.2,500) மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் தொழிலாளர்கள் கொந்தளித்து 17 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா அரசு தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வரவில்லை. அதுமட்டுமல்ல ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் ஜெயலலிதா அரசு தான். அரசுப் பேருந்துகளில் 50 சதவிகிதம் தனியாருக்கு தாரைவார்க்க அரசு ஆணை பிறப்பித்த வரலாறும் அ.தி.மு.க.வுக்கு உண்டு. இதை எல்லாம் மறந்து விட்டு போக்குவரத்து ஊழியர்களை ஒன்றுதிரட்டி 9ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை காலத்தில் இப்படி போராட்டம் நடத்துவது சரியா? மக்களை அவதிப்படவைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்வார்.. இவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.... என்று.. முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இனி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் செயல்பட்டால் தான் இது போன்ற போராட்டங்களை ஒடுக்க முடியும். இல்லாவிட்டால் இவர்கள் எல்லாம் மிஞ்சிக் கொண்டு தான் இருப்பார்கள்...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை