சென்னை: வீடு, மனைகளின், 'சர்வே' எண்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும், 'கோர்லேஷன்' எனப்படும் தொடர்பு விபரங்களை, பொது மக்கள் எளிதாக அறியும் வகையில், புதிய வசதியை அமல்படுத்த, வருவாய் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அது தொடர்பான சர்வே எண் அடிப்படையிலேயே, அனைத்து விபரங்களையும் ஆய்வு செய்வர். இதில், மக்கள்தொகை பெருக்கம், நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, ஒரு பிரதான சர்வே எண்ணில் அடங்கிய சொத்துக்கள், பல்வேறு பாகங்களாக பிரிக்கப்படுகின்றன.இதனால், ஒரு சர்வே எண்ணில், 10க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் வந்துள்ளன. விற்பனையின்போது குறிப்பிடப்படும் உட்பிரிவுக்கு முன், அந்த சொத்தின் பிரதான சர்வே எண்ணில், எத்தனை உட்பிரிவுகள் வந்தன; ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட நில அளவு என்ன என்பதை, புதிதாக சொத்து வாங்கும் நபர் அறிய வேண்டும்.குறிப்பாக, நகர்ப்புற நில அளவை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில், புதிதாக ஒரு சர்வே எண் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், அந்த சொத்தின் முந்தைய ஆவணங்களில், பழைய சர்வே எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு விபரங்களை, பொது மக்கள் அறிய வேண்டும்.இந்த விபரங்கள், மாவட்ட வாரியாக வருவாய் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இருப்பினும், பொது மக்கள் இந்த விபரங்களை சரிபார்க்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த விபரங்களுக்காக தாலுகா அலுவலம் சென்றால், அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.சர்வே எண் தொடர்பு விபரங்கள் அடங்கிய, 'கோர்லேஷன் ஸ்டேட்மென்ட்' குறித்து, பொது மக்கள் எளிதில் அறிய, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சொத்துகள் தொடர்பான பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை, பொது மக்கள் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து பெறலாம். இதுபோன்ற சேவைகளுக்காக, மக்கள் தாலுகா அலுவலகம் வர வேண்டியதில்லை.இந்நிலையில், நிலங்களின் சர்வே எண் தொடர்பு விபரங்கள் அடங்கிய, 'கோர்லேஷன் ஸ்டேட்மென்ட்' தகவல்களை, பொது மக்கள் தொலைபேசி வாயிலாக அறிய, நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையில், 'கால் சென்டர்' ஏற்படுத்தப்பட உள்ளது.பொது மக்கள், பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது எழும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கவும், இந்த மையத்தில் ஏற்பாடு செய்யப்படும். தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வசதி விரைவில் மக்கள் பயன்பாடடுக்கு வரும் என்றார்.