'முதல்வர் ஸ்டாலினின், 33 மாத ஆட்சியில், 8.65 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற பெயரில், சென்னை, கோவை, துாத்துக்குடி நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன் வழியாக, 1.91 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரசு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, ஜப்பான் நாடுகளுக்கு சென்று, 17,371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், 7,441 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன கடந்த மாதம் 7, 8ம் தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில், முன் எப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64,180 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது. இதன் வழியாக, 26 லட்சத்து 90,657 வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன கடந்த மாதம் 27ல், முதல்வர் ஸ்பெயின் சென்றார். இதன் பயனாக, 3,440 கோடி ரூபாய் அளவிற்கு, தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், இதுவரை, 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது; 27 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக, 74,757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.முதல்வரின் 33 மாத ஆட்சி காலத்தில், 8.65 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.