கலகத்தை உருவாக்குகிறார் கவர்னர்: முத்தரசன் கருத்து
ராஜபாளையம்; கலகத்தை உருவாக்க தமிழக கவர்னர் முயற்சிக்கிறார் என இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் கட்சி கிளை அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் கலகத்தையும், பதட்டத்தையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சட்டசபைக்கு வருகிறார்.தேசிய கீதம் பாடவில்லை என தேவையில்லாத கருத்தை சொல்லி தான் நியாயமாக நடந்து கொள்வது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்.கவர்னர் பதவி என்பது ஒழிக்கப்பட வேண்டிய பதவி. இந்த கூட்டத் தொடரில் வேங்கை வயல், அண்ணா பல்கலை, மின்கட்டண உயர்வு குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது ஆட்சி மாற்றம் வேண்டும் போன்ற பிரசாரத்திற்கு இந்த விவகாரங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நல்ல நோக்கம் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.