9 சட்ட மசோதாக்கள் கவர்னர் ரவி ஒப்புதல்
சென்னை: 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஒன்பது சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டசபையில், நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதா, 2022 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டு, கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில், சில குறைகளை சுட்டிக்காட்டி, கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார். கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், 16 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு கடல்சார் வாரிய திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு மின் நுகர்வு விற்பனை வரி மீதான வரி திருத்த மசோதா, தமிழ்நாடு ஊதியம் வழங்கல் திருத்த சட்ட மசோதா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதிய உயர்வு சட்ட மசோதா, சிறு குற்றங்களுக்கு தண்டனைகளுக்கு பதிலாக அபராதம் விதிக்கும் சட்ட மசோதா உட்பட ஒன்பது சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய நிதி நிர்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவுக்கும், கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.