பட்டம் வினாடி - வினா: மாணவர்கள் சரவெடி
சென்னை:'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடிட் ஆப் டெக்னாலஜி சார்பில், மாணவ - மாணவியருக்கான வினாடி - வினா போட்டி மற்றும் விருது நிகழ்ச்சி சென்னையில் துவங்கியது. பாட தகவல்கள் மட்டுமின்றி, பொது அறிவு, மொழித்திறனில் திறமையை வளர்க்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், மாணவர் பதிப்பாக வெளியாகும் 'பட்டம்' இதழ், பள்ளி மாணவ - மாணவியரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sdf3rh9z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அவர்களின் அறிவுத்தேடலை அகலமாக்கும் வகையில், கடந்த ஆறாண்டுகளாக வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப் படுகின்றன. அந்த வகையில், இந்தாண்டு, 200 பள்ளிகளில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, படிப்படியாக, மிகத்திறமையான நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான முதல்படியாக, நேற்று, 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' மாணவர் பதிப்பு மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், அம்பத்துார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 16 பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகினர். அவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து போட்டியை சந்தித்தனர். இறுதி போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன. அதில் பங்கேற்றோர், வினா தொடுத்த அடுத்த வினாடியில் விடை கூறி அசத்தி, போட்டியை அனல் பறக்க வைத்தனர். நிறைவில், கவிப்ரியா, ஹரிணி ஆகியோர் அணி, முதல் பரிசு பெற்றது. அவர்களுக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசை மூன்று அணிகள் பகிர்ந்து கொண்டன. வெற்றியாளர்களுக்கு, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் ஆர்.மகேஸ்வரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி நிறுவன முதல்வர் உமா கண்ணன், தாளாளர் அழகர்சாமி கண்ணன், பள்ளி முதல்வர் ஜெஸ்ஸி சாரதி, 'தினமலர்' துணைப் பொது மேலாளர் சேகர், 'தினமலர் பட்டம்' ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இறுதிப் போட்டிக்கான பரிசுகளை சத்யா ஏஜென்சிஸ் வழங்க உள்ளது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி நிறுவன முதல்வர் உமா கண்ணன் பேசுகையில், ''மாணவர்களின் கனவு சிறகுகளாகவும், அறிவியல் கதைகளின் களஞ்சியமாகவும், பொது அறிவு, வரலாறு, புதுமைகளை பேசி, விசித்திரங்களை விவரிக்கும் வித்தியாசமான இதழாக பட்டம் இதழ் உள்ளது,'' என்றார். ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் மகேஸ்வரி பேசுகையில், ''என் மகள் தற்போது எம்.பி.பி.எஸ்., படிக்கிறார். அதற்கு முன் அவர் 'பட்டம்' இதழ் நடத்திய வினாடி - வினா நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசு பெற்றார்; அதுவே, அவரை ஊக்குவித்தது. ''அதுபோல், மாணவ - மாணவியர் அனைவரும் விடாமுயற்சியுடன் முயற்சித்தால், வெற்றி பெறலாம்,'' என்றார். தாளாளர் அழகர்சாமி கண்ணன் பேசுகையில், ''குழந்தைகளின் அறிவை வளர்க்கும் 'பட்டம்' இதழ், அவர்கள் பட்டம் பெற உதவியாக உள்ளது,'' என்றார். பரிசுகள் கடந்த ஆண்டு, வினாடி - வினா இறுதிப்போட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 'ஆப்பிள் மேக் புக்', லேப்டாப், சைக்கிள், ப்ளூடூத் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் மிகச் சிறந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன.