பாலாற்றில் சாயக்கழிவு கலப்பு பசுமை தீர்ப்பாயம் வழக்கு
திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் சாயக் கழிவுநீர் கலப்பது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. திருப்பத்துார் மாவட்டம் மரப்பட்டு கிராமத்துக்கு அருகே, தோல் பதனிடும் தொழிற் சாலைகள் சட்ட விரோதமாக நடத்தப்படுகின்றன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், பாலாற்றில் கலக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. 'மழை காலத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரை ஆற்றில் கலப்பது தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை தென் மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அடுத்த கட்ட விசாரணை, செப்., 23ல் நடக்கும் என அறிவித்து உள்ளது. இதே போன்ற ஒரு வழக்கை ஜனவரி 30ல் விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பாலாற்றை மாசுபடுத்தும் நபர்கள் திகார் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும், சாயக்கழிவுகள் கலப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு தவறிழைத்த தொழிற்சாலைகளிடம் இருந்து அபராதம் வசூலித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. - டில்லி சிறப்பு நிருபர் -