உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள பாடலாசிரியருக்கு ஹரிவராசனம் விருது

கேரள பாடலாசிரியருக்கு ஹரிவராசனம் விருது

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது, பிரபல மலையாள பாடலாசிரியர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போடும் இணைந்து கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்து வருகின்றன. 2012-ல் யேசுதாசுக்கு இந்த விருது வழங்கி துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வீரமணி ராஜு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சித்ரா, கங்கை அமரன் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.தொடர்ந்து 14வது ஆண்டு விருதாக சபரிமலையில் நேற்று கேரளாவை சேர்ந்த கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு வழங்கப்பட்டுள்ள ஹரிவராசனம் விருது நினைவு பரிசு, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியவை.கேரள தேவசம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வாசன் இந்த விருதை வழங்கினார். இதில் தாமோதரன் நம்பூதிரி பேசியதாவது: தேவசம்போர்டில் ஊழியராக பணியாற்றியுள்ளேன். விருதை அனைத்து தேவசம் ஊழியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பாங்கோடு சாஸ்தா கோவிலில் பூஜாரியாக வேலை பார்க்கும் போது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டேன். பூஞ்ஞாறில் பூஜாரியாக இருந்தபோது சம்பளமும், பக்தர்கள் தரும் தட்சணையும் வாங்குவதில்லை என்று நான் முடிவு எடுத்தேன். இது, அங்கு என் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.கோவிலில் நிவேத்யத்தை ஏழைகளுக்கு வழங்கினேன். பசித்து வருபவர்களுக்கு உணவு கொடுப்பது மிகப்பெரிய புண்ணியம். சமூக கலாசார துறையில் என் செயல்பாடுகள் தான் நான் ஹரிவராசனம் விருது பெற காரணமாய் அமைந்தது. சபரிமலையில் அனைவரும் ஒன்று என்ற ஒரு மிகப்பெரிய தத்துவத்தை ஐயப்பன் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவரை நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது மகிழ்ச்சியை தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், உறுப்பினர் அஜி குமார், சுந்தரேசன், கேரள எம்.எல்.ஏ.க்கள் பிரமோத் நாராயணன். கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜன 15, 2025 09:00

இதே போன்று பக்திப்பாடல் பாடுவர்களை தமிழக திராவிட மாடல் அரசின்போது அறநிலையத்துறை அமைச்சர் ஊக்குவில்லாமே செய்வாரா பார்க்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை