உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கட்சி கொடிக் கம்பங்களால் அசம்பாவிதம் நடந்துள்ளதா? டி.ஜி.பி.,யிடம் அறிக்கை கோரும் உயர் நீதிமன்றம்

அரசியல் கட்சி கொடிக் கம்பங்களால் அசம்பாவிதம் நடந்துள்ளதா? டி.ஜி.பி.,யிடம் அறிக்கை கோரும் உயர் நீதிமன்றம்

மதுரைதமிழகத்தில் பொது இடங்களில் அரசியல் கட்சிகளால் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களால் இதுவரை விரும்பத்தகாத அசம்பாவிதம் எதுவும் நடந்துள்ளதா என்பது குறித்து டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை சித்தன் தாக்கல் செய்த மனு:மதுரை மேற்கு 6ம் பகுதி அ.தி.மு.க.,செயலராக உள்ளேன். மாநகராட்சி விளாங்குடி 20வது வார்டு காமாட்சி நகரில் எம்.ஜி.ஆர்.,மன்றம் வாசலில் ஏற்கனவே அ.தி.மு.க.,கொடிக் கம்பம் உள்ளது. அருகில் மின்சார வயர் செல்வதால், அதை மாற்றி எனது உறவினர் இடம் அருகில் நிறுவ அனுமதி கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தேன்; நிலுவையில் உள்ளது. மாநகராட்சியில் விசாரித்தபோது, பட்டா இடங்களில் மட்டுமே கொடிக்கம்பம் நிறுவ அனுமதி வழங்க வழிவகை உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதே பகுதி புறம்போக்கு இடத்தில் தி.மு.க.,மற்றும் இதர கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டுவிழாவையொட்டி காமாட்சி நகர் எம்.ஜி.ஆர்., மன்றம் அருகே கட்சி கொடிக் கம்பத்தை புதிதாக நிறுவ அனுமதிக்க மாநகராட்சி கமிஷனர், டி.ஆர்.ஓ.,விற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: தமிழகத்தில் பொது இடங்களில் கட்சிகளால் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களால், இதுவரை விரும்பத்தகாத அசம்பாவிதம் எதுவும் நடந்துள்ளதா என்பது குறித்து டி.ஜி.பி.,ஜன., 3ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ