4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய, நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். விசாரணையின் போது, 'புகார் விசாரித்து முடித்து வைக்கப்பட்டது' என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.இதை செய்ய தவறியது, செயல் நடைமுறை குளறுபடி.எனவே, வழக்கு முடித்து வைக்கப்பட்ட 2017 முதல், இதுவரை குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய, 11 பேருக்கு எதிராக, டி.ஜி.பி., துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க தவறிய, போலீஸ் எஸ்.பி.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 2015 முதல், இதுவரை கடலுார் மாவட்ட எஸ்.பி.,யாக பதவி வகித்த, நான்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயகுமார் மற்றும் தற்போதைய தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையோ, புகாரை முடித்த அறிக்கையோ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது கட்டாயம்.இது சம்பந்தமாக, காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை, நான்கு வாரங்களில் டி.ஜி.பி., பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மீதான அதிரடி தொடர்கிறது
ஏற்கனவே, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தவறிய, தலைமை செயலர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2023 செப்டம்பர், 19 முதல் இதுவரை தலைமை செயலர்களாக பதவி வகித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான ஷிவ்தாஸ் மீனா, என்.முரு கானந்தம் ஆகியோர், ஜூலை மாதம் ஆஜராகினர். கடலுாரில் தனியார் பள்ளி வசமுள்ள, கோவில் நிலத்தை மீட்க பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து, பா.ஜ., நிர்வாகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜூலை 10ம் தேதி, ஐந்து ஐ.ஏ.எஸ்., உட்பட, 11 அரசு அதிகாரிகள் ஆஜராகினர். அந்த வரிசையில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், தங்கள் பணிகளையும் உரிய நேரத்தில் செயல்படுத்தாத, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.