8ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை:தமிழகத்தில், ஆறு மாவட்டங்களில், வரும் 8ம் தேதி கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் பார்வூட், மதுரை மாவட்டம் தானியமங்கலத்தில், தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் காலை, வடக்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணியளவில், ஒடிஷா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. மீண்டும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 5.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து, வடக்கு சத்தீஸ்கர், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 8ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 8ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில், 9ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையின் ஒருசில இடங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.