உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை இன்று 19 மாவட்டங்களில்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கனமழை இன்று 19 மாவட்டங்களில்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை:தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட, 19 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து,பாதுகாப்பு ஏற்பாடுகளை வருவாய், பேரிடர் மேலாண்மை துறை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி, மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல், செப்., 20 வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரே சமயத்தில், 19 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. கன மழையால் பாதிப்பு ஏற்பட்டால், உடனவடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாலையில் அதிகரிக்கும் தன்னார்வ வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது: வளி மண்டல சுழற்சி ஒரு பக்கம் இருந்தாலும், வடமேற்கு வெப்ப காற்று மற்றும் நீராவி குவிதல் தமிழகத்தில் நிகழ்கிறது. அதே சமயத்தில், கிழக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்று அதில் சேர்வதால், தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரியில் துவங்கி மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என, மழை அடுத்தடுத்த பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று பகலிலேயே மழை துவங்கினாலும், மாலையில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வடமாநிலங்களில் தொடரும் இயற்கை சீற்றம்

உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் மேகவெடிப்பு, நிலச்சரிவு, பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் நேற்று ஒரே நாளில்11 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால், இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மஹாராஷ்டிராவிலும் பாதிப்பு மஹாராஷ்டிராவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. மராத்தாவாடாவில் உள்ள எட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால், அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 120 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி, பீட் மாவட்டத்தில் இருவரும், நாக்பூரில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. 200 குழந்தைகள் மீட்பு சஹஸ்த்ரதாரா, மால்தேவ்தா, சான்ட்லா தேவி மற்றும் தலன்வாலா உள்ளிட்ட பகுதிகள் இந்த இயற்கை சீற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சஹஸ்த்ரதாராவில் 19.2 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்தது. சாலைகள், வீடுகள், கடைகள் மூழ்கின. டேராடூனில், பவுந்தா பகுதியில் உள்ள தேவ்பூமி கல்வி நிறுவன வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால், அதில் பயின்ற, 200 குழந்தைகள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். மீட்புக் குழுவினர், குழந்தைகளை மீட்டனர். மண்ணில் புதைந்த குடும்பம் ஹிமாச்சல பிரதேசத்தில், விடிய விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, போய் பஞ்சாயத்துக்குட்பட்ட நெஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாக புதைந்தது. மீட்புப் படையினர் மண்ணில் புதைந்த இருவரை உயிருடன் மீட்டனர். மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மண்டி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. இதில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 20 பஸ்கள், அருகில் இருந்த கடைகள் ஆகியவை மூழ்கின.

5 பேர் உயிரிழப்பு

மலை பிரதேசமான உத்தராகண்டில் நேற்று மேகவெடிப்பு காரணமாக திடீரென பெய்த கனமழையால், குறுகிய நேரத்தில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, டேராடூன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்னவானது என தெரியாததால், உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !