ஹிந்து மக்கள் கட்சிக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை; ஹிந்து மக்கள் கட்சியின் கொள்கைகள், ஆன்மிகம் குறித்து, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கு, தமிழக டி.ஜி.பி.,யிடம் மனு அளித்தும், இதுவரை அனுமதி வழங்கவில்லை. பிரசாரத்திற்கு அனுமதி வழங்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக்கோரி, ஹிந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் குருமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். 'விழிப்புணர்வு பிரசாரம், வரும் 20ம் தேதி திருவள்ளூரில் துவங்கி சென்னை, திருவண்ணாமலை வழியாக, ஆக., 2ல் தர்மபுரியில் நிறைவடைய உள்ளது' என்றும் மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 'தமிழகம் முழுதும் பிரசாரம் நடத்த, ஒட்டுமொத்தமாக அனுமதி கோர முடியாது. 'ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமான சட்டம் - ஒழுங்கு பிரச்னை இருப்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை அணுகவும்' என, மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.