உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்றாண்டுக்கு மேலான நிலுவை வழக்குகளை விசாரிக்கிறது ஐகோர்ட்

மூன்றாண்டுக்கு மேலான நிலுவை வழக்குகளை விசாரிக்கிறது ஐகோர்ட்

சென்னை': மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க ஏதுவாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, அவ்வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளவற்றை விரைந்து முடிக்க, உச்ச நீதிமன்ற குழு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றமும் மற்றும் மதுரை அமர்வும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவுப்படி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன், நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. 'மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய விபரங்களை, வழக்கறிஞர்கள், காவல் துறையினர், வழக்கு தொடுத்தவர்கள் வழங்க வேண்டும். 'அது தொடர்பாக, தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இன்று பதிலளிக்க வேண்டும்' என்று கூறிய நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்தார். மேலும், 'சமரசம் செய்யத்தக்க வழக்குகளை அடையாளம் கண்டு, சமரசம் வாயிலாகவோ, மாற்று முறை தீர்வு வாயிலாகவோ வழக்கை முடித்து வைக்கலாம். 'சமரசம் செய்துகொள்ள முடியாத வழக்குகளுக்கும் தீர்வு காண வேண்டும். வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து, காவல் துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். 'காசோலை மோசடி வழக்குகளிலும் சமரசம் செய்வது குறித்து முயற்சிக்கப்படும்' என நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி