மதுரை - துாத்துக்குடி நான்குவழி சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை:'மதுரை - துாத்துக்குடி நான்குவழிச்சாலையை முறையாக பராமரிக்காததால் எலியார்பத்தி, புதுார் பாண்டியாபுரம் டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை - துாத்துக்குடி இடையே நான்குவழிச்சாலை அமைக்க 2006ல் ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்த பணி வழங்கப்பட்டது. 2011 முதல் சாலை பயன்பாட்டிற்கு வந்தது. ஒப்பந்ததாரர் நிறுவனம் சாலையின் இருபுறம் மற்றும் நடுவில் மரங்கள் நட வேண்டும். அப்பணி பகுதி அளவு நடந்துள்ளது. சாலையை நிறுவனம் முறையாக பராமரிக்க தவறியது. மதுரை அருகே எலியார்பத்தி, துாத்துக்குடி அருகே புதுார் பாண்டியாபுரத்தில் டோல்கேட்கள் அமைத்து வாகனங்களிடம் அந்நிறுவனம் கட்டணம் வசூலித்தது. அரசின் கடமை
சாலையை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறியதால், அந்நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் 2023ல் ரத்து செய்தது.தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டோல்கேட் கட்டணம் வசூலிக்கிறது. சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை நிறைவேற்றவில்லை. இருபுறமும் மரங்கள் நடும்வரை மற்றும் இதர பராமரிப்பு பணியை முடிக்கும் வரை டோல்கேட் கட்டணத்தில் 30 சதவீதம் வரை வசூலிக்க வேண்டும். நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.என்.எச்.ஏ.ஐ., தரப்பு: எங்களுக்கும், தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்த பிரச்னைக்கு சமரச தீர்ப்பாயத்தால் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னை எங்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையிலானது. மூன்றாம் நபரான மனுதாரர் தலையிட முடியாது. தள்ளுபடி செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பு: தனியார் நிறுவனம் சாலையை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் சாலையை பயன்படுத்துவோர் சிரமங்களை சந்திக்கின்றனர் என என்.எச்.ஏ.ஐ., உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் வாயிலாக நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததை என்.எச்.ஏ.ஐ., தரப்பு ஒப்புக்கொள்கிறது. கட்டணம் வசூல் என்பது இருதரப்பிற்கு இடையிலான பிரச்னை அல்ல. மூன்றாம் தரப்பாக மக்கள் உள்ளனர். அவமதிப்பு வழக்கு
மக்கள் தான் கட்டணம் செலுத்துகின்றனர். அதில், மனுதாரரும் அடக்கம். கட்டணம் செலுத்தும் மக்களுக்கு தரமான சாலை வசதி செய்ய வேண்டியது என்.எச்.ஏ.ஐ., பொறுப்பு. அதை நிறைவேற்ற தவறியதால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். பராமரிப்பு பணி முடியும் வரை சட்டப்படி கட்டணம் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சாலையை முறையாக பராமரிக்காமல், இருபுறமும் மரங்கள் நடாத சூழலில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது. மதுரை - துாத்துக்குடி நான்குவழி சாலையிலுள்ள டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இதை நடைமுறைப்படுத்தாவிடில் இந்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 18ல் என்.எச்.ஏ.ஐ., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.