கோயில் தெப்பக்குளங்கள் சீரமைப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கோயில்களுக்கு சொந்த மான சில தெப்பக் குளங்கள் நல்ல நிலையில் இல்லை. விரைவில் சீரமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. இதற்கு சொந்தமாக 4.22 லட்சம் ஏக்கர் நிலம், கட்டடங்கள், தெப்பக்குளங்கள் உள்ளன. தெப்பக்குளங்கள் மாசடைந்துள்ளன. முறையாக அறநிலையத்துறை பராமரிக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் அவைகாணாமல் போகும். கோயில் தெப்பக்குளங்களை புனிதமாகக் கருதி மதுரை, திருக்கோஷ்டியூர் உட்பட பல கோயில்களில் தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பக்குளங்களில் கழிவு நீர் கலப்பது, குப்பைகளை குவிப்பதை தடுக்க வேண்டும். தெப்பக்குளங்களை புனரமைத்து, பராமரிக்க வேண்டும் என தமிழக அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ்: இம்மனு 2021 ல் தாக்கல் செய்யப்பட்டது. கோயில் களுக்கு சொந்தமான பெரும்பாலான தெப்பக்குளங்கள் சீரமைக்கப்பட்டு துாய்மையாக பராமரிக்கப்படுகிறது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சில தெப்பக்குளங்கள் நல்ல நிலையில் இல்லை. அவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப் படுகிறது என உத்தர விட்டனர்.