மதுரை மாநகராட்சியில் ஒட்டுமொத்த சொத்து வரி ஆய்வுக்கு சிறப்பு குழு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை:'மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில், மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட கோரினார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர், 'இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது' என்றனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.மகேந்திரன், 'ஒட்டுமொத்தமாக மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார். நீதிபதிகள், 'மதுரை மாநகராட்சி பகுதி ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த, சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். மாநகராட்சி கமிஷனரிடம் விபரம் பெற்று, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆக., 20ல் தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.