உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அணைகளை துார்வார வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அணைகளை துார்வார வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:தமிழகத்திலுள்ள அணைகளை அவ்வப்போது துார்வார வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை, கொடிவேறி, கிருஷ்ணகிரி, மேட்டூர், பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சாத்தனுார் அணைகளை துார்வாராததால் சகதி படிந்துள்ளது. நீர்த்தேக்க அளவு குறைந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் 500 முதல் 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.அணைகளை துார்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, 2014 ல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். நீதிமன்றம், 'மனுவை தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. நடவடிக்கை இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தேன். அரசு தரப்பில், 'அணைகளை துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர். அரசு தரப்பு தவறான தகவல் அளித்துள்ளது. தவறான தகவல் அளித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆழியாறு உட்பட 11 அணைகளை துார்வார நடவடிக்கை கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வைகை அணையை துார்வார நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு ஏற்கனவே இந்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளிலும் தேங்கியுள்ள சகதி படிமங்களை அகற்ற அவ்வப்போது துார்வார வேண்டும். அணைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இது அரசின் கடமை. அப்போதுதான் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியும். துார்வாரும் பணியை விதிகள், திட்டங்கள் அடிப்படையில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அவசியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை