உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட திருவாரூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட திருவாரூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:'திருவாரூரில் தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம் போன்ற பகுதிகளில், சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவை சேர்ந்த யோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு:இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தும் ரசாயனங்களால், கிராமங்களில் உள்ள நீர் நிலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில், 1988 முதல் இறால் வளர்ப்பு தொழில் பிரபலமானது.

நடவடிக்கை

இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தும் ரசாயனங்களால், உலக பிரசித்தி பெற்ற உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்துக்கு வந்து செல்லும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.முத்துப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம், தொண்டியக்காடு போன்ற கிராமங்கள், அதை சுற்றிய விவசாய நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முத்துப்பேட்டை தாசில்தார் நான்கு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இதையடுத்து, இறால் பண்ணைகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. கடந்த ஜனவரி முதல் மாவட்டத்தில் வெளியூர் நபர்களால், சட்டவிரோதமாக இறால் வளர்ப்பு மீண்டும் செயல்பட துவங்கியது. எனவே, தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம் உள்ளிட்ட கிராமங்கள், விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக உள்ள இறால் பண்ணைகள் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

விசாரணை

கடந்த 2016ல் இறால் பண்ணைகளை அகற்றுவது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதிகாரிகள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, வழக்கறிஞர் வி.காசிநாதபாரதி ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மாவட்ட கலெக்டர் நேரடியாகவோ அல்லது ஒரு அதிகாரியை அனுப்பியோ, மாவட்டத்தில் உள்ள பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வில், இறால் பண்ணைகள் முறையான பதிவு இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால், உடனே அவற்றை மூட வேண்டும்.

பரிந்துரை

உரிம நிபந்தனைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டால், அந்த உரிமத்தை ரத்து செய்வது அல்லது திருத்தம் செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பரிந்துரைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை, 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகள், மாவட்ட கலெக்டர் பிறப்பித்த இறுதி உத்தரவு குறித்து, மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !