உள்ளாட்சி அமைப்புக்கான தீர்ப்பாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : உள்ளாட்சி அமைப்புக்கான தீர்ப்பாயம் மற்றும் சட்டம் மூலம் கிடைக்கும் பயன்களை மக்கள் பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களிலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி கமிஷனராக இருந்தவர் பவுன்ராஜ். இவர் ஊழலில் ஈடுபட்டு, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னையிலுள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறைமன்ற நடுவத்திற்கு(முறையீட்டு தீர்ப்பாயம்) புகார்கள் சென்றன. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க நடுவம் இடைக்கால உத்தரவிட்டது. இதற்கு எதிராக பவுன்ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி:உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பணிபுரியும் அலுவலர்களுக்கு எதிரான புகார்களை விசாரித்து, உத்தரவு பிறப்பிக்கும் நோக்கத்துடன், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. மனுதாரரும் இச்சட்டத்தின் வரம்பிற்குள் வருவார். நடுவம் பிறப்பித்த உத்தரவில் தவறு காண முடியாது.மனுதாரர் வால்பாறை நகராட்சி கமிஷனராக இருந்தபோது நடந்த முறைகேட்டை இந்நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி 2021ல் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். அது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனுதாரருக்கு எதிராக 2024ல் மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். 2021ல் பதிவு செய்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.உள்ளாட்சி அமைப்புகளின் விவகாரங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கத்தில், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற சட்டம் இயற்றப்பட்டது. புகார்களில் உண்மை அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பது விசாரணையின் முடிவில் மட்டுமே வெளிப்படும். தொந்தரவு செய்யும் நோக்கில் அற்பத்தனமாக தாக்கல் செய்யப்படும் புகாருக்கு அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது.இச்சட்டம் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் பற்றி அறிவிப்பு செய்ய வேண்டும். இதனால் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பயன்களை மக்கள் பெற முடியும். அறிவிப்பு செய்யப்படுவதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் உறுதி செய்ய வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.