உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 27 பேரை, செம்பியம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 'இந்த வழக்கை செம்பியம் போலீசார் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் என்கிற கீனோஸ் ஆம்ஸ்ட் ராங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது காவல்துறை தரப்பில், 'குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது' என, தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 'வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை. 'இந்த கொலையில் உண்மையை முழுமையாக கொண்டு வராமல், அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்தும் விசாரிக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார். நேற்று நீதிபதி பி.வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், விசாரணை ஆவணங்களை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்; ஆறு மாதங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி