சிவில் பிரச்னையில் போலீசார் தலையீடு எச்சரித்தும் தொடர்வதால் ஐகோர்ட் அதிருப்தி
மதுரை: 'சிவில் பிரச்னையில் போலீசார் தலையிடக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து நடக்கிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி வெளியிட்டது. மதுரை மாவட்டம், மேலுார் அருகே பூஞ்சுத்தி ராஜலட்சுமி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: என் கணவர் சீமானுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தின் பட்டா கணவர் மற்றும் மற்றொருவர் பெயரில் கூட்டு பட்டாவாக இருந்தது. எதிர்தரப்பினர் வலியுறுத்தியதால் கூட்டு பட்டாவை வருவாய்த்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதற்கு எதிராக கணவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக அக்., 14 இரவு, 1:30 மணிக்கு எங்கள் வீட்டிற்கு மேலுார் போலீசார் மூன்று பேர் வந்தனர். கணவரை கட்டாயப்படுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர். சட்டவிரோதமாக அடைத்து வைத்துஉள்ளனர். அவருக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. கணவரை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது . மனுதாரரின் கணவரை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவரை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலுார் போலீஸ் எஸ்.ஐ., யின் இச்செயலை கண்டிக்கிறோம். சிவில் பிரச்னையில் போலீசார் தலையிடக்கூடாது என, ஏற்கனவே நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்துள்ளன. இதுபோல் எதிர்காலத்தில் நிகழாது என நம்புகிறோம். இந்த உத்தரவின் நகலை மதுரை மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்ப வேண்டும். அவர் பிரச்னையை பரிசீலித்து முடிவெடுக்கலாம். மனுதாரரிடம் அவரது கணவர் ஒப்படைக்கப்பட்டார். இவ்வாறு உத்தரவிட்டனர்.