சுமை துாக்கும் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்
மதுரை: புதுச்சேரி சட்டத்தைப் போல் சுமைகளை ஏற்றி, இறக்குதல் பணியை ஒழுங்குபடுத்த தொழிலாளர்களின் நியாயமான உரிமைகள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமைகளுக்கு இடையே சமநிலையை பேணும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு ஆராய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வலியுறுத்தியுள்ளது. நிறுவனங்களில் பொருட்களை ஏற்றுதல், இறக்குதலில் சில சுமைப் பணி தொழிலாளர்கள் (லோடுமேன்கள்) சட்டவிரோதமாக தலையிடுகின்றனர். சில தொழிற்சங்கங்களுடன் இணைந்துள்ளோம் என்கின்றனர். அதிக கூலி கேட்கின்றனர். அவர்கள் தங்கள் தொழிலில் தலையிடக்கூடாது; போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என பல வர்த்தக சங்கங்கள், தனிப்பட்ட வணிகர்கள், ஒரு தனியார் நிறுவனம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சுமைப் பணி தொழிலாளர் சங்கத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்னையில் அரசு அதிகாரிகள் தலையிட தடை விதிக்க வேண்டும் என சங்கத்தால் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தில் வர்த்தகம் செய்வதில் எதிர்கொள்ளும் பொதுவான மற்றும் தொடர்ச்சியான பிரச்னையை இவ்வழக்குகள் எழுப்புகின்றன. வர்த்தகம் மற்றும் வணிகம் செய்வது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை. எந்தவொரு வர்த்தகம் அல்லது வணிகம் செய்யும் நபரும், அவர் விரும்பும் நபரை பணியமர்த்த மற்றும் பொருட்களை ஏற்றி, இறக்கி வைப்பதற்கான வேலையில் ஈடுபடுத்த சுதந்திரம் உள்ளது. இதில் சட்டவிரோதமான முறையில் தலையிட முடியாது. இந்த உரிமை தனியாரின் அதிகாரத்தால் தோற்கடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. அத்துமீறல், மிரட்டல் அல்லது தாக்குதல் நடந்தால் அது கிரிமினல் குற்றமாக மாறும். மிரட்டல், வன்முறை மற்றும் இடையூறு ஆகியவை நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளாக தொழில்துறை தகராறு சட்டம் கருதுகிறது. சம்பள பிரச்னைகள் இருந்தால் தீர்வு காண்பதற்கான வழி தொழிலாளர் நீதிமன்றங்கள் அல்லது சமரச நடவடிக்கைகளை நாடுவதுதான். இதுபோன்ற ரிட் மனுக்கள் மீண்டும், மீண்டும் தாக்கலாகின்றன. இது நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை சரியாக நிறைவேற்றாத தன்மையை காட்டுகிறது. தமிழகத்தில் சுமை ஏற்றுதல் மற்றும் இறக்குதலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான சட்டம் எதுவும் இல்லை என்பது இந்நீதிமன்றத்திற்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி அரசு சுமை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் (வேலைவாய்ப்பு மற்றும் நலனை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் ( 2017) இயற்றியுள்ளது. இது அனுமதியின்றி நுழைவு, மிரட்டல் மற்றும் நியாயமற்ற நடைமுறைகளை தடை செய்கிறது. தமிழகத்தில் இத்தகைய சட்டரீதியான கட்டமைப்பு இல்லாத நிலை, வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனால் தொழிற்சங்கம் என்னும் போர்வையில், கட்டுப்பாடில்லா சுரண்டல் நடக்கிறது. வணிகர்கள், தொழிலாளர்கள் தொடர்ந்து நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையால் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் பாதிப்பில்லை என்பதை கவலையுடன் நீதிமன்றம் பதிவு செய்கிறது. வீடுகள் கட்டுதல், வீடு மாறுதல் அல்லது வீட்டு பொருட்களை இறக்கி வைத்தல் போன்ற அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது, சட்டவிரோதமாக' லோடுமேன்'களுக்கு கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இது வணிகர்கள் பிரச்னை மட்டுமல்ல. வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களையும் பாதிக்கும் பரவலான சமூக பிரச்னை. இத்தகைய நடைமுறைகள் தொடர்வது சட்டத்தின் ஆட்சியை தகர்க்கும். மக்களை பாதுக்க வேண்டிய அரசின் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் இத்தகைய சட்டவிரோத தலையீடு தொடர்ந்தால், நீதிமன்றம் இப்பிரச்னையை கையிலெடுக்க தயங்காது. புதுச்சேரி சட்டத்தைப் போல் சுமைகளை ஏற்றி, இறக்குதல் பணியை ஒழுங்குபடுத்த தொழிலாளர்களின் நியாயமான உரிமைகள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற ஆராய தமிழக அரசை இந்நீதிமன்றம் வலியுறுத்துகிறது. இவ்வாறு உத்தரவிட்டு சில மனுக்களை அனுமதித்தார். சில மனுக்களை தள்ளுபடி செய்தார்.