உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் கல்வி சேர்க்கை: தமிழகம் முதலிடம்

உயர் கல்வி சேர்க்கை: தமிழகம் முதலிடம்

சென்னை : உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: அகில இந்திய உயர் கல்வி ஆய்வு நிறுவன அறிக்கைப்படி, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், 49 சதவீதம் பெற்று, இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது, அகில இந்திய சராசரி விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.'நான் முதல்வன், புதுமைப் பெண்' உட்பட பல்வேறு திட்டங்களை, அரசு செயல்படுத்துவதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, இடைநிற்றல் இல்லாமல், உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2.73 லட்சம் மாணவியர் பயன் பெறுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் படித்து, கல்லுாரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை, 34 சதவீதம் அதிகரித்துள்ளது.நான் முதல்வன் திட்டத்தில், இதுவரை 27 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். பயிற்சி பெற்ற, 1.84 லட்சம் இளைஞர்களில், 1.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்படும், 120 மாணவர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.அரசு கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை, 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டடங்கள், புதிய கல்லுாரிகள் கட்டுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி