மதுரை: மதுரையில், பத்தாண்டுகளுக்கு முன் வாங்கிய 25 ஆயிரம் ரூபாய் கடனுக்காக, கணவன், மனைவியை காரில் கடத்திய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி மகாலட்சுமி, 45. இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன், மணிநகரம் பாஸ்கரனிடம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினர். கடனை திரும்பச் செலுத்த முடியாமல் சண்முகம், குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறினார். இதையறிந்த பாஸ்கரன், சில ஆண்டுகளுக்கு முன், சென்னை சென்று பணம் கேட்டார். அப்போது, பாஸ்கரன் மாரடைப்பால் இறந்தார். இதற்கு, தங்களை காரணமாக சொல்லக்கூடும் என பயந்து, சண்முகம், குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்று விட்டார். இதன் பின், அவர்கள் மதுரைக்கு வரவில்லை. சண்முகம் மகள், உடல்நலக் கோளாறால் ஆரப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரை பார்க்க, நேற்று முன்தினம் சண்முகம், மகாலட்சுமி வந்தனர். அதையறிந்த, ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பாஸ்கரனின் சகோதரர் திருப்பதி ராஜன், பாஸ்கரனின் மனைவி சுதா மற்றும் ஒரு பெண் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு, மருத்துவமனையில் இருந்து சண்முகம், மகாலட்சுமியை, வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் கடத்தினர். மணிநகரத்தில் ஒருவீட்டில் அடைத்து வைத்து, அவர்களைத் தாக்கினர். மகாலட்சுமியை மட்டும் விட்டுவிட்டு, சண்முகத்தை காரில் கடத்திச் சென்றனர். கரிமேடு போலீசில் மகாலட்சுமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நேதாஜி தலைமையில் தனிப்படையினர், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.