மனைவி கொலை கணவன் கைது
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிச்சுப்பட்டியில் மனைவி ராம்கலாவை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.பிச்சுப்பட்டியை சேர்ந்தவர் ராம் கலா 29. இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த பாலாஜிக்கும் 35, 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சென்னையில் வசித்து வந்த இவர்களுக்கு 11 வயது மகன், 5 வயது மகள் உள்ளனர்.பாலாஜி சென்னையில் கேட்டரிங் வேலை செய்து வந்தார். அங்கு மனைவி மீது சந்தேகமடைந்து பாலாஜி அடிக்கடி சண்டையிட்டார். இதனால் ராம்கலா இரு மாதங்களுக்கு முன்பு பிச்சுப்பட்டியில் உள்ள தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துவிட்டார். குழந்தைகளையும் இங்குள்ள பள்ளியிலேயே சேர்த்து விட்டார். ராம் கலா, குழந்தைகளை சமரசம் செய்து சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக பாலாஜி பிச்சுப்பட்டிக்கு வந்தார். ஆனால் ராம்கலா மறுத்துவிட்டார். இங்கேயே பாலாஜி தங்கி இருந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்குள் நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலாஜி கத்தியால் ராம்கலா கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.