மனைவியை கொன்று கணவர் தற்கொலை விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட வயதான தம்பதி வழக்கில், மனைவியை கொலை செய்து விட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருக்கத்தஞ்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; விவசாயி. மனைவி ராமாயி, 48. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சென்னையில் பணிபுரிகிறார். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜராமன் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது, செல்வராஜ், ராமாயி உடல்கள் அழுகிய நிலையில் வீட்டிற்குள் இருந்தது. விசாரணையில், வழக்கம்போல ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மனைவியை தாக்கியதில் இறந்துள்ளார். அதிர்ச்சியடைந்த முதியவர் செல்வராஜ் துாக்குபோட்டு இறந்திருப்பதும் தெரிந்தது. கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், செல்வராஜ், ராமாயி உடல்கள், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று பிரேத பரிசோதனை முடித்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.