சென்னை: தமிழக நீர்மின் நிலையங்களில், இந்த நிதியாண்டில், 449 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய, மத்திய மின்சார ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், எட்டு மாதங்களிலேயே அதை விட அதிகமாக, 475 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில், தமிழக மின் வாரியத்திற்கு, 2,324 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் உள்ள அணைகளில் மழை காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, தினமும் சராசரியாக, 1 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு, 2025 - 26ம் நிதியாண்டில், தமிழக நீர் மின் நிலையங்களில், 449.70 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய, மின் வாரியத்திற்கு, மத்திய மின்சார ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டு முடிவடைய நான்கு மாதங்கள் உள்ள நிலையில், இம்மாதம், 1ம் தேதி நிலவரப்படி, அதை விட அதிகமாக, 475 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தென் மேற்கு பருவ மழை கை கொடுத்ததே காரணம். முந்தைய ஆண்டின் ஏப்., முதல் டிச., 1 வரை நீர் மின் உற்பத்தி, 330 கோடி யூனிட்களாக இருந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டை விட, இந்தாண்டின் முதல் எட்டு மாதங்களில் கூடுதலாக, 145 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.