கோவை : ''கோவை லோக்சபா தொகுதியில், பா.ஜ.,வெற்றி பெற்று விட்டால், அரசியலில் இருந்தே வெளியேற தயாராக இருக்கிறேன்,'' என, கோவை மாநகர் மாவட்ட செயலாளரான, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் தெரிவித்தார்.தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பலரும், பா.ஜ.,வில் இணையப் போகிறார்கள்; அதற்கான விழா, திங்கட்கிழமை (26ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு கோவையில் நடைபெறுகிறது என்கிற அறிவிப்பு, பா.ஜ.,சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள், அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க., கொடி கட்டிய இரு கார்கள், ஓட்டல் வளாகத்தில் நின்றிருந்தன. இச்சூழலில், அ.தி.மு.க., கோவை மாநகர் மாவட்ட செயலாளரான, எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், அப்பகுதிக்கு காரில் வந்திறங்கி, நடைபாதையில் நடந்து சென்றார். உடனே, அவர், பா. ஜ.,வில் இணைய வந்திருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அம்மன் அர்ஜூனன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் பா.ஜ., நிகழ்ச்சி நடத்திய ஓட்டலுக்கு எதிரே உள்ள, எனது நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அதற்குள், பா.ஜ.,வில் இணையப் போவதாக, சமூக வலைதளத்தில் பரப்பி விட்டனர். அ.தி.மு.க.,வில் ராஜாவாக இருக்கிறேன்; பா.ஜ.,வுக்கு சென்று கூஜா துாக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.,வில் உள்ள எந்தவொரு தொண்டனும், பா.ஜ.,வில் இணைய மாட்டான். பா.ஜ.,வை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைய உள்ளனர்.வரும் லோக்சபா தேர்தலில், கோவையில் பா.ஜ., வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில், எங்களால்தான் பா.ஜ., வெற்றி பெற்றது.கள நிலவரம் எங்களுக்குதான் தெரியும். கோவை அ.தி.மு.க., கோட்டை; பா.ஜ.,வால் தனித்து வெல்ல முடியாது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை இணைத்ததுபோல், இங்கும் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பா.ஜ.,வில் இணைக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
'இது அறமற்ற அரசியல்'
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பிற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் குறித்து, கடந்த ஒரு வாரமாக, பா.ஜ.,மற்றும் தி.மு.க., ஐ.டி., விங்க் இணைந்து, அவதுாறு பரப்பி வருகின்றன. அ.தி.மு.க., தொண்டர்களின் மன உறுதியை, குலைக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற வதந்தியை பரப்புகிறார்கள். இது அறமற்ற அரசியல். முன்னாள் அமைச்சர் வேலுமணி குறித்து வரும் தகவல் அயோக்கியத்தனமானது. அறம் இருந்தால், இதுபோன்ற செயல்களை தி.மு.க.,வும், பா.ஜ.,வும் நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.