தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், 'நான் தான் முதல்வர் வேட்பாளர்' என, கட்சி பொதுக்குழு தீர்மானம் வாயிலாக த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதனால், த.வெ.க., தங்கள் கூட்டணிக்கு வரும் என காத்திருந்த அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் களமிறங்க, தமிழக வெற்றிக் கழகம் கட்சியை, நடிகர் விஜய் தயார்படுத்தி வருகிறார். சினிமாவிற்கு முழுக்கு போட்டு, தேர்தல் பிரசாரப் பணிகளை செப்டம்பர் மாதம் திருச்சியில் விஜய் துவக்கினார். அரியலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பிரசாரப் பேருந்தில் சுற்றுப்பயணம் செய்தார். வழக்குப்பதிவு
அதே மாதம் 27ம் தேதி நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு, கரூர் பிரசாரத்தில் பங்கேற்றார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, த.வெ.க., மாவட்டச் செயலர், மாநில நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் மீது எந்த வழக்கும் பதிவாகாத நிலையில், அவர் வீட்டிலேயே முடங்கினார். இதனால், த.வெ.க., செயல்பாடுகள் ஒரு மாதமாக தடைபட்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அக்கட்சியை கூட்டணிக்கு இழுக்கும் வேலைகளை அ.தி.மு.க., தலைமை துவக்கியது. அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், த.வெ.க., கொடிகளுடன் அக்கட்சித் தொண்டர்கள் தலை காட்டினர். அப்போது பேசிய பழனிசாமி, 'கொடி பறக்கிறது பாருங்க... கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது' என கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், 'அ.தி.மு.க., கூட்டணிக்கு த.வெ.க., வந்தால் நல்லது; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், த.வெ.க.,வை விடமாட்டார்கள்' என கருத்து தெரிவித்தனர். இரு தரப்பிலும் கூட்டணி பேச்சு நடப்பதாக தகவல் வெளியானது. அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, நிர்வாகிகளும், த.வெ.க., தங்கள் கூட்டணிக்கு வரும்; தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நம் பிக்கையோடு காத்திருந்தனர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், 'நான் தான் முதல்வர் வேட்பாளர்' என, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார். முழு அதிகாரம்
அக்கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடைசி தீர்மானமாக, 'முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த், ''மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொடுக்கும் தகுதி கொண்ட ஒரே கட்சி த.வெ.க., மட்டும் தான். வரும் சட்டசபை தேர்தலில் விஜயை முதல்வராக அமர வைக்க, த.வெ.க.,வினர் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். விஜய் முதல்வர் வேட்பாளர் என்பதை அ.தி.மு.க., ஏற்காது. எனவே, த.வெ.க.,வுடன் கூட்டணி என்ற அ.தி.மு.க.,வினரின் கனவு சிதைந்துள்ளது. 'தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது' த.வெ.க., சிறப்பு பொதுக்குழு தீர்மானங்கள் * அண்ணா பல்கலையை தொடர்ந்து, கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இது போன்ற கொடுமைகள் நடந்தபடி இருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாததால், தி.மு.க., ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து நிற்கிறது.* தமிழகத்தில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான ஓட்டுரிமையை பறிக்கும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.* டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளிடம் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகின. இதற்கு, விவசாயிகள் விரோத தி.மு.க., ஆட்சி தான் காரணம்.* பாதுகாக்கப்பட்ட ராம்சார் மண்டலத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைப்புடன் இது நடந்துள்ளது. அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்* மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் த.வெ.க., தலைவர் விஜய்க்கும், அவரை காண வரும் பொது மக்களுக்கும், பாரபட்சமின்றி தமிழக அரசு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் .* தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் அறிவித்ததை அந்நிறுவனம் மறுத்துள்ளது. எனவே, தமிழகத்தில் தொழில் துறைக்கு வந்துள்ள முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.* தமிழகத்தில் ஜனநாயக முறையில், பொது பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் கருத்துரிமையை சிதைக்கும் சர்வாதிகார செயலை, அரசு நிறுத்த வேண்டும்.* முதல்வர் வேட்பாளராக த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. தனித்தன்மைக்காக பேசியிருக்கலாம் புதிதாக கட்சி
ஆரம்பிக்கும்போது, தங்கள் கட்சிக்கென தனித்தன்மை வேண்டும் என்று தான்
அனைவரும் நினைப்பர். அதன்படி விஜய் பேசியிருக்கலாம். முதல்வர் வேட்பாளர்
விஜய் என்பது அவர்கள் கருத்து. யார் முதல்வர் என்பதை மக்கள் தான்
தீர்மானிக்க வேண்டும். ஜெயகுமார், அமைப்பு செயலர், அ.தி.மு.க., - நமது நிருபர் -