உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி

கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி

சென்னை : 'வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த பெண், சொந்தமாக ஆட்டோ வாங்க உதவ வேண்டும்' என, மகளிர் தின விழாவில் கோரிக்கை வைத்த பெண்ணுக்கு, கவர்னர் ரவி ஆட்டோ வாங்கி கொடுத்தார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், சர்வதேச மகளிர் தின விழா கடந்த மார்ச் 7ம் தேதி கொண்டாடப்பட்டது.

ஆசை

இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் பங்கேற்று, தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசினர். இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமலா, 34, பங்கேற்றார்.இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். தினமும் ஊரில் இருந்து பஸ்சில் சென்னை சென்று, ஆட்டோ ஓட்டி வந்தார். விழாவில் அவர் பேசும் போது, 'தற்போது வாடகை ஆட்டோ ஓட்டுகிறேன்; எனக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு கவர்னர் உதவ வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.அவர் தமிழில் பேசியதை கவனித்த கவர்னர், மூன்று மாதங்களுக்கு பின், அவரது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். தன் விருப்ப நிதியில், அமலாவுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.கவர்னர் மாளிகையில், அமலா மற்றும் அவரது மகள்களிடமும், ஆட்டோவிற்கான சாவியை வழங்கினார். அதன்பின், அமலா ஆட்டோ ஓட்ட... அவரது மகள்களுடன், கவர்னர் பின் சீட்டில் அமர்ந்து சிறிது துாரம் சென்றார். அவருக்கு, அமலா மற்றும் அவரது மகள்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து, அமலா கூறியதாவது:

சொந்தமாக ஆட்டோ வாங்குவது, கனவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது.

மகிழ்ச்சி

மூன்று மாதங்களுக்கு முன், கவர்னரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், ஆட்டோ கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. எனக்கு சொந்தமாக ஆட்டோ கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.தினமும் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, 9:00 மணிக்கு கொட்டிவாக்கம் வருவேன். அங்கிருந்து ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு 9:00 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு நாளைக்கு 400 ரூபாய் ஆட்டோ வாடகை; மற்ற செலவுகள் போக, கையில் எதுவும் நிற்காது. கவர்னர் சொந்தமாக ஆட்டோ வாங்கி தந்திருப்பதால், இனி சிரமம் குறையும். என் மகள்களை நன்றாக படிக்க வைப்பேன். கடவுளை நான் கண்டதில்லை, கவர்னரை கடவுள் வடிவில் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KR india
ஜூன் 28, 2025 23:45

இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள். மக்கள் கவர்னர் ரவி அவர்களுக்கு வணக்கங்கள் நன்றிகள் மத்திய அரசு, மாநில கவர்னர்களுக்கு, கீழ்கண்ட கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும். 1 அரசியல் வேறுபாடு, சாதி, மத, இனப்பாகுபாடு காரணமாக, மாநில அரசால், உதவி மறுக்கப்படும், தகுதியான ஏழை மக்களுக்கு, கவர்னர் மூலமாக, பொருளாதார உதவி, தொழில் உதவி வழங்க, மத்திய அரசின் நிதி துறையில் இருந்து, கூடுதல் நிதி ஒதுக்கப் பட வேண்டும். அதற்கு மாற்றாக, மாநில அரசுக்கு ஒதுக்கப் படும் நிதியை குறைக்க வேண்டும். 2 மாநில அரசால், அரசியல் காரணங்களுக்காகவோ, அரசின் மீதான அதிருப்தியை திசை திருப்புவதற்காக, "சிறு குற்றங்களில்" கைது செய்யப்படும், அப்பாவிகளை பொது மன்னிப்பு கொடுத்து, விடுதலை செய்யக்கூடிய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இந்த முறை, அமலில் உள்ளதை நாம் அறிவோம். தற்போது, தூக்கு தண்டனை கைதிகளுக்கு மட்டுமே இந்த ஏற்பாடு உள்ளது. அதை, Non-Congnizable Offence-க்கும் விரிவுபடுத்தலாம். 3 மாநில அரசு தொடர்ச்சியாக தவறிழைக்கும் போது, மாநில அரசை ஒரு ஆண்டுக்கு "சஸ்பெண்ட்" செய்யக் கூடிய அதிகாரம் வழங்கப் பட வேண்டும். அந்த ஒரு வருடம், கவர்னர் தலைமையில், அனைத்து அதிகாரங்களுடன், கூடிய ஆட்சி நடத்தப்பட வேண்டும். ஒரு வருடம் முடிந்ததும், மீண்டும் மாநில அரசின் கைகளில் பொறுப்பு ஒப்படைக்கலாம். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மாநில அரசு, கவர்னர்-க்கு, பயந்து, ஒழுங்காக ஆட்சி நடத்த முயலும் அல்லவா ?


புதிய வீடியோ