உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சொன்னால் செய்வேன்! மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., விஜய் உறுதி காஞ்சிபுரம் கூட்டத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்

 சொன்னால் செய்வேன்! மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., விஜய் உறுதி காஞ்சிபுரம் கூட்டத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்

சென்னை:கரூர் சம்பவத்திற்கு பின், மக்கள் சந்திப்பை மீண்டும் துவக்கிய த.வெ.க., தலைவர் விஜய், 'சொன்னால் செய்வேன்' என உறுதி அளித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், தேர்தலுக்கு முன்னோட்டமாக, 'அனைவருக்கும் நிரந்தரமான வீடு' என்பது உட்பட, பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ihevxggf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கரூரில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவத்திற்கு பின் நேற்று, காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க., தொண்டர்களை, ஸ்ரீபெரும்புதுாரை அடுத்த குன்னம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் விஜய் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: அண்ணாதுரை துவக்கிய கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில், எங்களுக்கும், அவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. தனிப்பட்ட முறையில், அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தில் இருக்கலாம்; நாம் அப்படி கிடையாது. மக்களை, என்னை, எல்லோரையும், பொய் சொல்லி நம்ப வைத்து, ஓட்டுப்போட வைத்து ஏமாற்றினர். ஆட்சிக்கு வந்த பின் நல்லது செய்வது போல நாடகமாடுகின்றனர்.

கொள்ளை தான்

அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும். 'கொள்கை கிலோ என்ன விலை' என்று கேட்கும் அளவிற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நமக்கு கொள்கை இல்லை என்கிறார். இவர்கள் கொள்கையை குத்தகைக்கு எடுத்தது போல பேசுகின்றனர். ஆனால், இவர்களின் கொள்கையே கொள்ளை தான். இது, மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 'எங்கள் கட்சி ஒன்றும் சங்கரமடம் கிடையாது' என்றனர். இப்போது, அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நாங்கள் பாப்பா என்று ஆசையாக, பாசமாக சொன்னதை, அதிர்ச்சியாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது. அதையே நீங்கள் விமர்சனம் என்றால், நாங்கள் என்ன செய்வது. நாங்கள் இன்னும் விமர்சனம் செய்யத் துவங்கவில்லை. இன்னும் அடிக்க துவங்கவே இல்லை; அதற்குள் அலறினால் எப்படி? அமைச்சரவையில் புலவர்கள் யாராவது இருந்தால், கர்சீப் எடுத்து அவர்களின் கண்ணீரை துடைத்து விடுங்கள். காஞ்சிபுரம் மண்ணை வாழ வைக்கும் ஜீவநதி பாலாறு. இன்றைக்கு, பாலாறை சுரண்டி கொள்ளையடித்து விட்டனர்; மொத்தமாக அழித்து விட்டனர். இதை நான் போற போக்கில் சொல்லவில்லை; ஆதாரத்துடன் சொல்கிறேன். அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, 4,730 கோடி ரூபாய் அளவுக்கு மணலை கொள்ளை அடித்துள்ளனர்.

ஆதாரம்

இதற்கெல்லாம் நீதிமன்றத்திலும், அமலாக்க துறையிடமும் ஆதாரம் உள்ளது. மேலிருந்து கீழ் வரைக்கும், 'சிண்டிகேட்' போட்டு கொள்ளை அடித்துள்ளனர். மக்களின் பிரச்னைகளை பேசுவதால், இப்போது ஆட்சியில் இருப்போருக்கு நம் மீது சில ஆத்திரங்கள் வரத்தான் செய்யும். அதனால் தான், சட்டசபை துவங்கி சாதாரண நிகழ்ச்சிகள் வரை, எல்லா மேடைகளிலும் த.வெ.க., குறித்து அவதுாறு பேசுகின்றனர். கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என, தெளிவாக கூறிவிட்டுத் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில், எந்த குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. விஜய் சும்மா எதுவும் சொல்ல மாட்டான்; ஒன்று சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டான். அது, மக்களுக்கு நன்றாகவே தெரியும். எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கிய போது, அவரை கூத்தாடி என்றவர்கள், பின்னர் அவருடன் சேர்ந்தனர். தமிழக மக்களும் எம்.ஜி.ஆரிடம் தான் சேர்ந்தனர். அந்த வரலாறு, நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 'மர்ம யோகி' படத்தில், 'கரிகாலன் குறி வைத்தால், தவற மாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்' என்று எம்.ஜி.ஆர்., கூறியிருப்பார். இதை எல்லாம் யாருக்கு சொல்கிறேன்; எதற்கு சொல்கிறேன் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நன்றாக இருக்கும். ஏன் விஜயை தொட்டோம்; விஜய் உடன் இருக்கும் மக்களை தொட்டோம் என, நினைத்து நினைத்து, 'பீல்' பண்ணப் போகின்றனர். த.வெ.க.,வினருக்கு அரசியல் புரிதல் இல்லை என்கின்றனர். எங்களுடன் இருக்கும் மக்களை தற்குறி என்கின்றனர். இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, உங்கள் வாழ்நாள் முழுதும் விடை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, தி.மு.க.,வின் அரசியலை ஒரு கேள்விக் குறியாக்கப் போகின்றனர். த.வெ.க.,வினர் தற்குறியெல்லாம் கிடையாது; தமிழகத்தின் ஆச்சரியக்குறி. இவர்கள் எல்லாம் தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அறிகுறி. இவ்வாறு விஜய் பேசினார். பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பாதுகாப்பு கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பின், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைப்படி, த.வெ.க.,வில், 1,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தனி அடையாளத்துடன் சீருடை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நேற்று, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தன்னார்வலர்கள் அணியினர் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 'வீட்டுக்கு ஒரு கார் லட்சியம்; 'டூ - வீலர்' நிச்சயம்' காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விஜய் அளித்த வாக்குறுதிகள்: அனைவருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும், ஒரு, 'டூ - வீலர்' இருக்க வேண்டும். கார் தான் லட்சியம். அதற்கான வச தி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொருளாதா ர வளர்ச்சியை, வழியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருப்போரும், குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தது போல, கல்வியில், பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். மக்கள் எந்தவித பயமும் இல்லாமல், நம்பிக்கையோடு வந்து செல்லும் வகையில், அரசு மருத்துவமனைகளில் மாற்றம் செய்ய வேண்டும். பருவமழை காலத்தில் ஏற்படுகிற வெள்ளத்தால் ஊரும், மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு 4,000 கோடி ரூபாய் செலவு செய்தோம் என உருட்டினரே; அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லாமல், உண்மையான ஒரு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தை உருவாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கை சரியாக வைத்திருக்க வேண்டும். இதை எப்படி செயல்படுத்த போகிறோம் என, தேர்தல் அறிக்கையில் மிக விளக்கமாக தருவோம். மற்றவர்கள் மாதிரி, எல்லாவற்றையும் அடிச்சு விட்டு ஏமாற்றும் வேலை எங்களிடம் இல்லை. நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டும் தான். எனக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. இவ்வாறு விஜய் கூறினார். 'விஜயை தற்குறி என சொல்லியிருக்கலாம்' டி.கே.எஸ்.இளங்கோவன் கிண்டல் த.வெ.க., தலைவர் விஜயின் பேச்சு குறித்து, தி.மு.க., மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: நாங்கள் யாரையும் தற்குறி என்று சொல்லவில்லை. விஜயை வேண்டுமானால் சொல்லி இருக்கலாம். சிலரது பேச்சு பொருத்தமற்றதாக இருந்தால், அப்படி திட்டுவர். பொதுவாக எல்லாரும் சொல்லக்கூடிய வார்த்தை தான். கரூரில் பகல் 12:00 மணிக்கு பேசுவதாக மக்களை அழைத்து வந்து விட்டு, அவர்கள் வெயிலில், குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல், இரவு 7:30 மணி வரை இருந்து மயங்கி விழுந்தனர். மதியம் 12:00 மணிக்கு வராமல், இரவு 7:30 மணிக்கு வந்த கேள்விக்கு, விஜய் ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை. என் கேள்வி என்னவென்றால், 10, 12 மணி நேரம், மக்களை வெயிலில் காத்திருக்க வைத்து விட்டு, உணவு, தண்ணீர் வழங்காமல் இருந்தால், 100 பேர் மயக்கம் அடைவது புதிதல்ல. நாங்கள் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். இதற்கு ஏன் இதுவரைக்கும் விஜய் பதில் அளிக்கவில்லை. நாமக்கல்லில், காலை 11:30 மணிக்கு பேசிவிட்டு, அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் கரூர் வந்து பேசிவிட்டு செல்லாதது ஏன். இதற்கு விஜய் பதில் சொல்ல வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில், என்ன செய்து கொண்டிருந்தார். மக்களை கூட்டமாக நிறுத்தி வைத்து, அவர்கள் மயக்கம் போட்டு விழுந்தது குறித்து கவலைப்படாமல் இருந்துள்ளார். இந்த குற்றத்திற்கு விஜய் தான் பொறுப்பு. அவர் எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாதவர். கொள்ளை அடிப்பது குறித்து ஆதாரத்துடன் சொல்லவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கொள்ளை அடித்தது குறித்து பேசுவாரா? கரூரில், 41 பேரின் உயிரை காவு வாங்கியதற்கு முதலில் அவர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.சிறுவர்களுக்கு அனுமதி மறுப்பு காஞ்சிபுரத்தில், தனியார் கல்லுாரியில் நேற்று த.வெ.க., தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டம் கூடுவதை தடுக்க, மாவட்டம் முழுதும், 2,000 நபர்களுக்கு மட்டுமே, கியூ.ஆர்., குறியீடுடன் சிறப்பு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள், மூன்று கட்ட பரிசோதனைக்கு பின், அனுமதி சீட்டுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, 15 வயதுக்கு குறைவான, சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை