தமிழ் மொழியை காக்க உயிரையும் கொடுப்பேன்: தமிழிசை
திருவொற்றியூர்:''தமிழ் மொழிக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறினார்.திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில், பா.ஜ.,வினர் அமைத்திருந்த, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின், தமிழிசை அளித்த பேட்டி: தமிழ் மொழியை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் தி.மு.க., - எம்.பி., கனிமொழி, துணை முதல்வர் உதயநிதி, அவருடைய மகன் இன்பநிதி ஆகியோர் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் படிக்கவில்லை. ஆனால், தமிழரிஞர் மகளான நான் தமிழில் தான் படித்தேன். இப்படிப்பட்ட போலிகள் தமிழை காப்பாற்ற வேண்டியதில்லை. நாங்கள், உயிரைக் கொடுத்தாவது தமிழ் மொழியை காப்போம். தமிழக மாணவர்கள் மூன்று மொழி படிக்க தடைபோட்டு, வஞ்சிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் கவர்னராக இருந்த போது, சி.பி.எஸ்.சி., கல்வித் திட்டத்தை செயல்படுத்த கையெழுத்திட்டேன். அதற்காக என்னை தமிழ் இன துரோகி என மோசமாக விமர்சிக்கிறார், தமிழக பாடநுால் கல்வி நிறுவன தலைவர் லியோனி. அப்படியென்றால், சி.பி.எஸ்.சி., பள்ளி நடத்தும் முதல்வரின் மகள் செந்தாமரை மற்றும் தி.மு.க., அமைச்சர்கள் ஆகியோரும் தமிழ் இன துரோகிகளா?ஹிந்து மத விழாக்களுக்கு, இன்று வரை, தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை. சாமானிய மக்கள் நிலங்கள், எந்த ஆவணங்களுமின்றி வக்பு வாரியம் எடுத்துள்ளது. அதை முறைப்படுத்தவே வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்ப்பட்டுள்ளது. உடனே, சட்டத் திருத்தம் கொண்டு வந்த பா.ஜ.,வினரை மதத்திற்கு எதிரானவர்கள் போன்று சித்தரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.