நல்லாட்சி நடத்தினால் ஈரோட்டில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்தது ஏன்?
விக்கிரவாண்டி:''மும்மொழி கொள்கையை கடைபிடித்தால்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று கூறுவது ஜனநாயகமில்லை' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசிய வழக்கில், விக்கிரவாண்டி கோர்ட்டில் ஆஜராக வந்த சீமான் கூறியதாவது:மத்திய அரசின் நிதி என்பது மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம் தான்.மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வரியை, மாநில வளர்ச்சிக்கான நிதியாக, மத்திய அரசு திருப்பிக் கொடுக்கிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையை கடைபிடித்தால் தான், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு கூறுவது ஜனநாயகத்திற்கும், நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானது.ஹிந்தியை படிக்க வேண்டும் எனச் சொல்லி, மறைமுகமாக அதை திணிக்கின்றனர். ஹிந்தியை படித்தால் நாட்டில் நிலவும் பசி, பட்டினி தீர்ந்து விடுமா?மும்மொழி கொள்கை என்பது மோசடியான கொள்கை. ஹிந்தியை எதற்காக படிக்க வேண்டும் என்பதை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூற வேண்டும்.தமிழகத்தில் ஆளும் கட்சி கோழைகளின் கூடாரமாகவே விளங்குகிறது. தமிழகத்தில் போராட்டங்கள் அதிகம் நடைபெறுகின்றன. ஆங்காங்கே பாலியல் வன்கொடுமை நடக்கிறது. மயிலாடுதுறையில் கள்ளச் சாராயத்தை தடுத்த இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நல்லாட்சி கொடுப்பவர்கள் ஏன் ஈரோடு இடைத்தேர்தலில் நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கினார்கள்? நல்லாட்சி நடத்துவதன் லட்சணம் இதுதான். இவ்வாறு சீமான் கூறினார்.